
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 85 ரன்களும், டக்கட் 41 ரன்களும் எடுத்தனர். இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், கவாஜா 47 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 91 ரன்களும், பாரிஸ்டோ 78 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 384 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.