
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற நார்த் குரூப் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் யார்க்ஷயர் மற்றும் லங்காஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லீட்ஸில் உள்ள ஹெடிங்க்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லங்காஷயர் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 77 ரன்களையும், பில் சால்ட் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 42 ரன்களையும் சேர்த்தனர். யார்க்ஷயர் தரப்பில் தாம்சன், சோஹான், மில்னஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யார்க்ஷயர் அணியில் அப்துல்லா ஷஃபிக் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 54 ரன்களையும், வில் சதர்லேண்ட் 28 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லங்காஷயர் தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிறிஸ் கிரீன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.