
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இரு அணிகளும் இத்தொடரை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.