
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவெல் 43 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஷாகிப் மஹ்மூத், டேன் மௌஸ்லி, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 159 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கிய நிலையில், கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய பில் சால்ட் இந்த போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய பட்லர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.