
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது வரும் செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அதன்படி ஸ்காட்லாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.
இதில் ஸ்காட்லாந்து டி20 தொடரானது செப்டம்பர் 04ஆம் தேதியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கானொலி உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இத்தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சென் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இவர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய நிலையில், காயமடைந்து தொடரில் இருந்து விலகினார். மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் இருந்தும் அவர் விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.