
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இத்தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை 5ஆவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. மறுபுறம் கோப்பையை வெல்ல போராடிய எஞ்சிய அணிகளுக்கு மத்தியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் தங்களுடைய முதல் சீசனை போலவே இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.
குறிப்பாக கேப்டன் கேஎல் ராகுல் பாதியிலேயே விலகிய போதும் அந்த அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்து சிறப்பாகவே செயல்பட்டது. இருப்பினும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் வெற்றிகரமான மும்பையிடம் தோல்வியை சந்தித்த லக்னோ மீண்டும் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. முன்னதாக கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் ஆன்ட்டி ஃபிளவர் செயல்பட்டு வந்தார்.
இருப்பினும் அவருடைய 2 வருட பதவி காலம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த வருடத்துடன் நிறைவு பெற்றுள்ளதால் அடுத்த சீசனில் லக்னோவுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த பதவிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட உள்ளதாக பிரபல கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.