ஃபால்க்னர், டொனால்ட் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜேம்ஸ் பால்க்னர், ஆலன் டொனால்ட் ஆகியோரின் சாதனைகளை தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா முறியடித்துள்ளார்.

Kagiso Rabada Record: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகப்சட்சமாக டிம் டேவிட் 4 பவுண்டரி, 8 சிக்ஸர் என 83 ரன்களைக் குவித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் குவெனா மபாகா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கல்டான் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், பென் துவார்ஷூயிஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வக்கிறது. இந்நிலையில் இப்போட்டியில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சில சாதனைகளைப் படைத்துள்ளார். அதன்படி, ஆலன் டொனால்ட் மற்றும் ஜேம்ஸ் பால்க்னர் ஆகியோரது சாதனையை ரபாடா முறியடித்துள்ளார்.
அந்தவகையில், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார், இதற்கு முன், ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் ராபின் பீட்டர்சன் ஆகியோர் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது ரபாடா 11 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் பாட் கம்மின்ஸ் 13 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்
- பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகள்
- ககிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா) - 11 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்
- ஜேம்ஸ் பால்க்னர் (ஆஸ்திரேலியா) - 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்
- ராபின் பீட்டர்சன் (தென்னாப்பிரிக்கா) - 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்
- ஆஷ்டன் டர்னர் (ஆஸ்திரேலியா) - 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள்
இது மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வீரர் எனும் பெருமையையும் ரபாடா பெற்றுள்ளார். இதற்கு முன் ஆலன் டொனால்ட் 44 போட்டிகளில் 98 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், தற்போது காகிசோ ரபாடா 38 போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்
- ஷேன் வார்ன் - 69 போட்டிகளில் 89 இன்னிங்ஸ்களில் 190 விக்கெட்டுகள்
- டேல் ஸ்டெய்ன் - 50 போட்டிகளில் 63 இன்னிங்ஸ்களில் 130 விக்கெட்டுகள்
- க்ளென் மெக்ராத் - 58 போட்டிகளில் 73 இன்னிங்ஸ்களில் 115 விக்கெட்டுகள்
- ஷான் பொல்லாக் - 59 போட்டிகளில் 68 இன்னிங்ஸ்களில் 102 விக்கெட்டுகள்
- ககிசோ ரபாடா - 38 போட்டிகளில் 46 இன்னிங்ஸ்களில் 99 விக்கெட்டுகள்
- ஆலன் டொனால்ட் - 44 போட்டிகளில் 54 இன்னிங்ஸ்களில் 98 விக்கெட்டுகள்
Also Read: LIVE Cricket Score
இதையடுத்து ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை டார்வினில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now