
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸீல் 357 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக டோனி டி ஸோர்ஸி 78 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 86 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வாரிகன் 4 விக்கெட்டுகளையும், ஜெயடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 233 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேசி கார்டி 42 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 36 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.