
ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மூன்று மாதத்திற்கு மேல் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்தும் தொடர்ந்து பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலில் அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் 826 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.
பாட் கம்மின்ஸுக்கும் அஸ்வினுக்கும் 34 புள்ளிகள் இடைவெளி இருக்கிறது. எனினும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிராக அஸ்வின் களமிறங்க உள்ள நிலையில் அவருடைய புள்ளிகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை அஸ்வின் மேலும் கெட்டியாக பிடித்துக் கொள்வார். இதேபோன்று ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜடேஜா நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார்.
ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இதில் அஸ்வின் இரண்டாவது இடத்திலும், அக்சர் பட்டேல் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடத்தில் இந்திய அணியில் ரிஷப் பந்த் மட்டுமே இருக்கிறார். அவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ஏழு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனினும் அவர் பத்தாவது இடத்தில் நீடிக்கிறார். ரோஹித் சர்மா பன்னிரண்டாவது இடத்திலும் விராட் கோலி 14 ஆம் இடத்திலும் உள்ளனர்.