
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணியானது தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குசல் மென்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.