CWC 2023: முதல் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார்; நியூசி கிரிக்கெட் வாரியம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. முதல் போட்டியில் மிகவும் முக்கியமான போட்டி என்பதால், இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு முன்பாக இரு அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளன. நியூசிலாந்து அணி முதல் பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. அதேபோல் இங்கிலாந்து அணி நாளை இந்திய அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளன. இதனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு, நியூசிலாந்து அணி பதிலடி கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
Trending
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கேன் வில்லியம்சன், கடைசி நேரத்தில் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் வில்லியம்சன் காயத்தில் இருந்து இன்னும் முழுமையான ஃபிட்னஸை எட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய பயிற்சி போட்டியில் வில்லியம்சன் பேட்டிங் மட்டுமே செய்வார் என்றும், திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன்பின் வில்லியம்சனின் ஃபிட்னஸை பொறுத்து அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் களமிறங்க வாய்ப்பில்லாததால், நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லேதம் செயல்படவுள்ளார். அண்மை காலமாக டாம் லேதம் தலைமையில் தான் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இதனால் அந்த அணிக்கு பின்னடைவு இல்லையென்றாலும், பேட்டிங்கில் வில்லியம்சனின் பங்கு இல்லாமல் இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now