
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இருப்பினும் சாதாரண இருதரப்பு தொடர்களில் மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ள இந்திய அணி அழுத்தமான தொடர்களில் சொதப்புவதில் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்பதை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சந்தித்த மெகா தோல்வியால் மீண்டும் நிரூபித்தது. குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் அழுத்தமான போட்டிகளில் இந்தியாவை கைவிடுவதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அது போக கெளதம் கம்பீர், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா என 2011 உலகக் கோப்பை வெல்வதற்கு இடது கை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றினர்.
ஆனால் இம்முறை களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் அணியில் ரோஹித் முதல் பாண்டியா வரை அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பது பெரிய பின்னடைவை ஏற்படுத்த காத்திருக்கிறது. அதை சரி செய்வதற்காக வளர்க்கப்பட்ட ரிஷப் பந்த் காயத்தால் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படும் நிலையில், முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ராவும் இன்னும் முழுமையாக குணமடையாதது இந்திய ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது.