
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து, ஹர்திக் பாண்டிய தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. அதில் குஜராத் அணி இந்தளவுக்கு சிறப்பாக ஃபைனலுக்கு தகுதி பெற அதன் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் ஷுப்மன் கில் பேட்டிங்கில் 851 ரன்கள் விளாசி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்று முக்கிய பங்காற்றி வருகிறார்.
கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர்நாயகன் விருது வென்று அசத்திய அவர் 2019இல் சர்வதேச அளவில் அறிமுகமாகி 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். அதே போல கடந்த ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்வதற்கு 483 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய காரணத்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார்.
அத்துடன் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் விளாசிய அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரிலும் சதமடித்தார். அப்படி டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதால் சச்சின், விராட் கோலி ஆகியோருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக போற்றப்படுகிறார்.