
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி ஒரு கட்டத்தில் 45 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது பென் டக்கெட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர் . டக்கெட் மற்றும் பேர்ஸ்டோவ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த பிறகு தனி ஆளாக இங்கிலாந்து அணிக்காக போராடினார் ஸ்டோக்ஸ் . 70 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்தது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. சிறப்பாக விளையாடிய அவர் 214 பந்துகளில் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகளுடன் 155 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .
கடந்த 2019 ஆம் ஆண்டு ஹெட்டிங்லி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனி ஆளாக போராடி இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் பென் ஸ்டோக்ஸ் . அதேபோன்று இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் விளையாடி மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது . கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் இவரது ஆட்டம் பற்றி தங்களது சமூக வலைதளங்களில் இவரை புகழ்ந்து வருகின்றனர் .