
மும்பை நகரில் கடந்த ஒரு மாதமாக பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளன. இதுவரை 50க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதில் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிவதற்குள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகளை தவிர எஞ்சிய அணிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன.
அதேபோல இந்த தொடரில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நிறைய இளம் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். அதிலும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் நிறைய இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினம் என தெரிந்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் 9 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழகத்தின் சாருக்கானுக்கு பஞ்சாப் அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அதில் அவர் சொதப்பியதன் காரணமாக இடையில் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பிடித்த ஜிதேஷ் சர்மா இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முறையே 26 (17), 23 (11), 30* (15), 11 (8), 32 (23), 2 (5), 38* (18) என கடைசி நேரங்களில் களமிறங்கி வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய ரன்களை அடிப்பவராக இருந்து வருகிறார். இதுவரை 97 பந்துகளை சந்தித்துள்ள அவர் 14 பவுண்டரிகளையும் 9 சிக்சர்களையும் பறக்கவிட்டுள்ளார்.