
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களுடைய ஆறாவது வெற்றியை பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய முகேஷ் குமார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் கேஎல் ராகுல் 57 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 5ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார். மேற்கொண்டு ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையையும் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக டேவிட் வார்னர் 135 இன்னிங்ஸ்களில் 5ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது கேஎல் ராகுல் 130 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.