
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியுடன் குவாலிபயர் இரண்டாவது போட்டியில் மோதும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. நேற்று பெய்த மழை காரணமாக போட்டி சிறிது தாமதமாக துவங்கினாலும் முழுவதுமாக 20 ஓவர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்தது. பெங்களூர் அணி சார்பாக இளம் வீரர் ரஜத் பட்டிதார் ஆட்டமிழக்காமல் 112 ரன்களை விளாசினார்.
அதைத் தொடர்ந்து 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 193 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாட பெங்களூர் அணி தகுதி பெற்றது.