
உலகக் கோப்பை தொடருக்கு கேஎல் ராகுல் தேவையா அவர் காயத்தில் இருந்து வந்திருக்கிறார் அவர் எப்படி சரியாக விளையாடுவார் என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். இதற்கு அனைத்திற்கும் இன்று தன்னுடைய பேட்டிங் மூலம் கே எல் ராகுல் பதிலடி கொடுத்திருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தான அணி பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை கொண்டது. அவர்களுக்கு எதிராக காயத்திலிருந்து திரும்பி விளையாடுவது என்பது சாதாரண காரியம் கிடையாது.
இதில் 147 ரன்கள் இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி இன்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் மூன்று ஓவர் வரை கே எல் ராகுலும் விராட் கோலியும் பொறுமை காத்தனர். அதன் பிறகு மழை மேகங்கள் சூழ்ந்ததால் வேகமாக ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொண்ட இருவரும் அதிரடியை காட்டினர்.
ஒரு முனையில் கோலி தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் கே எல் ராகுல் பட்டையை கிளப்பினார். அதிலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பவுண்டரியையும், சிக்ஸரையும் அடித்து நொறுக்கினார் கேஎல் ராகுல். குறிப்பாக ஷாகின் அஃப்ரிடி, பஹிம் அஷ்ரஃப், ஷதாப் கான் இஃப்திகார் அஹ்மத் ஆகியோர் ஓவர்களை கே எல் ராகுல் தெறிக்க விட்டார்.