
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் லக்னோ அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் 51 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் தனது 5000 ரன்களைப் பூர்த்தி செய்வார். இதனை செய்யும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் குவித்த வீரர் எனும் வார்னரின் சாதனையையும் முறியடிப்பார்.