
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் கூட அடிக்காத போது, தனியாளாக போராடி சதம் அடித்துள்ளார்.
கேஎல் ராகுலின் சதம் குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டை கூர்ந்து கவனித்து வருகிறேன். என்னை பொறுத்தவரை கேஎல் ராகுலின் இந்த சதம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட டாப் 10 சதங்களில் ஒன்றாக இருக்கும்” என்று பாராட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்திற்கு பின் 6 மாதம் ஓய்வில் இருந்த கேஎல் ராகுல், ஆசிய கோப்பை தொடரில் இருந்து அபாரமாக விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற புதிய ரோலை எடுத்து கொண்ட கேஎல் ராகுல், இந்திய கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் வீரராக உயர்ந்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன் ரசிகர்களால் அதிகம் ட்ரால் செய்யப்பட்டவர் கேஎல் ராகுல்.