
ஐபிஎல்லில் 2018ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த கேஎல் ராகுல், அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியும் உள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேஎல் ராகுல் அபாரமாக ஆடியிருக்கிறார். ஆனால் ஒரு அணியாக அந்த அணி வீரர்கள் இணைந்து சிறப்பாக ஆடாததால் வெற்றி பெறமுடியவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் அணியை கடந்த சில சீசன்களாக ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தனி ஒருவனாக தூக்கி நிறுத்திய கேஎல் ராகுல், தற்போது செம ஃபார்மில் ஆடிவருகிறார். கடந்த சீசனில் 626 ரன்களை குவித்தார். கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட்டை விட வெறும் 9 ரன்களே ராகுல் குறைவாக அடித்திருந்தார்.
அதற்கு முந்தைய ஐபிஎல் 13வது சீசனில் (2020) 670 ரன்களை குவித்த ராகுல் தான் ஆரஞ்சு கேப்பை வென்றார். அதற்கு முந்தைய 2019 சீசனில் 593 ரன்களை குவித்து, வார்னருக்கு அடுத்து அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார் ராகுல். இப்படியாக கடந்த சில சீசன்களாகவே டாப் 3 ரன் ஸ்கோரர்களில் ஒருவராக ராகுல் திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பாக ஆடிவருகிறார்.