
ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ர்ன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 39 ரன்களையும் சேர்த்தனர். கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. மேலும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பில் சால்ட் ஆட்ட்நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “நாங்கள் மிக மோசமாக தோல்வியடையும் நாள்களில் இதுவும் ஒன்று. இது போன்ற தோல்விகளை ஜீரணிக்க கடினமாக உள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியும் இதுபோன்ற தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்த தோல்வியால் தளர்ந்துவிடாமல், தவறுகளைச் சரிசெய்து சிறப்பாக கம்பேக் கொடுப்போம் என நம்புகிறேன்.