
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்த வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களையும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
அதன்படி பிசிசிஐ வெளியிட்டிருந்த இந்த அணியில் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடிவரும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இளம்வீரரான கே.எல் ராகுல் இந்திய அணியை தலைமை தாங்கி வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ராகுல் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியையும் பி.சி.சி.ஐ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தொடரானது நாளை ஜூன் 9ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்க உள்ள நிலையில் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக இத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.