
இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட அணி வீரர்களை பட்டியலை வெளியிட வேண்டும் என ஏற்கனவே ஐசிசி கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளுமே தங்களது அணிகளை சேர்ந்த வீரர்களின் பட்டியலை உறுதி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தற்போது எதிர்வரும் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை உறுதி செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் இலங்கை சென்று இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசித்து உலகக் கோப்பை தொடருக்கான அணியை உறுதி செய்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அணியில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணியில் இணைந்த கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதோடு முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.