ராகுலின் திறமையை புரிந்து ஆதரவுக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்!
இந்திய டெஸ்ட் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்புவது குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் அவருக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தியாவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ள போதும், இந்திய கேப்டன் கேஎல் ராகுலின் பேட்டிங் மட்டும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.
வங்கதேச தொடரின் முதல் போட்டியில் 22 மற்றும் 23 ரன்களை அடித்த அவர், 2ஆவது போட்டியிலும் இன்னும் ஒருபடி கீழிறங்கி 10 மற்றும் 2 ரன்களுக்கெல்லாம் அவுட்டாகி சென்றார். ஏற்கனவே டி20 உலகக்கோப்பையில் சொதப்பிய ராகுல், டெஸ்ட் போட்டியிலும் சொதப்புகிறார். இதனால் இனியும் அவர் அணிக்கு தேவையா என்ற வகையில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Trending
இந்நிலையில் இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில், “வங்கதேச தொடருக்கு முந்தைய தொடரை எடுத்துக்கொள்ளுங்கள். தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட் மற்றும் இங்கிலாந்தில் 4 டெஸ்ட்கள் என விளையாடினார். இதில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களை கேஎல் ராகுல் அடித்திருந்தார். அதுவும் அயல்நாட்டு களங்களில் அடித்தார். கடினமான களங்களிலேயே நன்றாக விளையாடிய ராகுலின் திறமையை புரிந்து ஆதரவுக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
கேஎல் ராகுல் இந்தியாவின் கேப்டன். அவரை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட முடியாது. எனவே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவரின் ஆட்டத்தை பார்ப்போம். ஒருவேளை அதிலும் சரிவர இல்லையென்றால் அவர் தேவைதானா? என்ற கேள்வி மிகவும் அழுத்தமாக கேட்கலாம். ஆனால் அதுவரை அவருக்கு ஆதரவு தர வேண்டும்.
பேட்டர்களின் மனநிலையை ரசிகர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் ஒரு கேப்டன், அதன் அழுத்தம் இருக்கும். நினைத்தபடி ரன்கள் அடிக்க முடியவில்லை. இடம் போய்விடுமா என்ற பதற்றம் இருக்கும். இப்படி சுற்றி சுற்றி அழுத்தங்கள் இருக்கும் போது, அவர் அதனை உடைத்து வெளியே வர சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now