
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
ஆஸ்திரேலியாவில் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதால், உள்ளூர் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. இதனால் அணியின் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடின்றி அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கட்டளை விதித்துள்ளது.
இதன்காரணமாக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடியனர். இதில் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி தங்கள் ஃபார்மை நிரூபித்த நிலையில், ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சோபிக்க தவறினர்.