விராட் கோலிக்கு காயம்; முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சீனியர் வீரருமான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஃபார்முக்கு திரும்ப முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும் நடப்பு இங்கிலாந்து தொடரிலும் அவரால் சரிவர சோபிக்க முடியவில்லை.
இதனால் விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்த நிலையில், ரோஹித் சர்மா அவருக்கு ஆதரவு வழங்குவது போல் பேசினார். இந்த நிலையில், விராட் கோலிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Trending
மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அவர் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன. எனினும் போட்டி தொடங்குவதற்கு முன்பே இது குறித்த தகவல் தெரிய வரும்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வீரர்கள் விருப்பம் இருந்தால் பங்கேற்கலாம் என்ற விலக்கு வழங்கப்பட்டது. விராட் கோலி ஃபார்மில் இல்லாததால், அவர் கண்டிப்பாக இந்தப் பயிற்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இதற்கு அவருக்கு ஏற்பட்ட காயம் தான் காரணம் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கின்றன.
ஒரு வேலை விராட் கோலி போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதனிடையே, விராட் கோலிக்கு உண்மையில் காயம் தானா இல்லை, நம்பியார் காலத்து டெக்னிக்கான ஃபார்மில் இல்லாத வீரரை காயம் என்று அனுப்பி விடுகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
டெஸ்ட் போட்டியை பார்த்து, டி20 போட்டிக்கு முடிவு எடுப்பதும், டி20 போட்டியை பார்த்து ஒருநாள் போட்டிக்கு முடிவு எடுப்பதும், மிகப் பெரிய தவறு. விராட் கோலி கடைசியாக விளையாடிய 11 சர்வதேச ஒருநாள் போட்டியில் 6 முறை அரைசதம் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now