
டெல்லி அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ச் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரையும் வெற்றியுடன் முடித்துள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வீரர் சுனில் நரைன் சில சாதனைகளை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக விளையாடிய சமீத் படேல் 208 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது சுனில் நரைன் கேகேஆர் அணிக்காக 209 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனைப் படைத்துள்ளார்.