
IND-W vs PAK-W, WCWC 2025: பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியின் வீராங்கனைகள் கிராந்தி கவுட், தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து 31 ரன்களில் பிரதிகா ராவலும், 19 ரன்களில் ஹர்மன்ப்ரீத் கவுரும் விக்கெட்டுகளை இழந்தனர். இந்த போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிரங்கிய ஹர்லீன் தியோல் 46 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்டு களமிறங்கிய வீராங்கனைகளில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ரிச்சா கோஷ் 35 ரன்களையும், தீப்தி சர்மா 25 ரன்களையும், ஸ்நே ரானா 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வலுவான ஸ்கோரை அமைத்துக் கொடுத்தனர்.