
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கான பதிலடியை தென் ஆப்பிரிக்க அணி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த காஷ்வி கௌதம் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் காஷ்வி கௌதம் விளையாடிய நிலையில், 5 ஓவர்களை மட்டுமே வீசிய கையோடு காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார்.