Advertisement

ஸ்ரீகர் பரத் அசத்தல் சதம; போட்டியை டிரா செய்தது இந்திய ஏ அணி!

இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Advertisement
ஸ்ரீகர் பரத் அசத்தல் சதம; போட்டியை டிரா செய்தது இந்திய ஏ அணி!
ஸ்ரீகர் பரத் அசத்தல் சதம; போட்டியை டிரா செய்தது இந்திய ஏ அணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 20, 2024 • 07:09 PM

இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இரண்டு நாட்கள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டங்களை இந்தியா ஏ அணியும், இங்கிலாந்து லயன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டி அஹ்மதாபாத்தில் நடைபெற்றது. அஹ்மதாபாத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 20, 2024 • 07:09 PM

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி ஜென்னிங்ஸ் (154), ஜோஷ் பொஹன்னன் (125) ஆகியோரது சிறப்பான சதத்தின் மூலம் 118 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு  553 ரன்களைக் குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய ஏ அணி தரப்பில் மனவ் சுதர் 4 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. தற்போதைய வளர்ந்து வரும் நட்சத்திரமான சாய் சுதர்சன் முதல் பந்திலேயே அவுட் ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார். 

Trending

அவரைத்தொடர்ந்து அபிமன்யூ ஈஸ்வரனும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய ராஜத் பட்டிதார் ஒருமுனையில் நங்கூரம் போல் நின்று விளையாட மறுபக்கம் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான், பிரதோஷ் பால், ஸ்ரீகர் பரத், புல்கிட், மனவ் சுதர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜத் பட்டிதார் சதமடித்ததுடன்,  19 பவுண்டரி, 5 சிக்ஸர் உடன் 151 ரன்களைச் சேர்த்து அசத்தினார். 

இருப்பினும் இந்திய ஏ அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து லையன்ஸ் அணி தரப்பில் மேத்யூ பாட்ஸ், ஃபிஷர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் 326 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய லையன்ஸ் அணியில் ஜென்னிங்ஸ் 64 ரன்களையும், ஜேம்ஸ் ரிவ் 56 ரன்களைச் சேர்க்க, அந்த அணி 163 ரன்கள் எடுத்த நிலையில் இன்னிங்ஸைத் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதனால் இந்திய ஏ அணிக்கு 489 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

அதன்படி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வர் ரன்கள் ஏதுமின்றியும், ராஜத் பட்டிதார் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த சாய் சுதர்சன் - சர்ஃப்ராஸ் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்தனர். பின் 56 ரன்களில் சர்ஃப்ரான் கான் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பால் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து ஜோடி சேர்ந்த மனவ் சுதர் - ஸ்ரீகர் பரத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் இருவரும் அரைசதம் அடித்தும் அசத்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகர் பரத் சதம் விளாசினார். இதனால் கடைசிநாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 426 ரன்களைச் சேர்த்திருந்தது. 

இதில் ஸ்ரீகர் பரத் 116 ரன்களையும், மனவ் சுதர் 89 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் காரணமாக இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 24ஆம் தேதி அஹ்மதாபாத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement