
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 50 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதன் மூலம் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் உதனா, பெரேரா, குணரத்னே உள்ளிட்டோர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மாஸ்டர்ஸ் அணியில் கேப்டன் குமார் சங்கக்காரா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தியதுடன், 19 பவுண்டரி, ஒரு சிக்சர் என 106 ரன்களையும், அசெலா குணரத்னே 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.