
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. பொதுவாக இங்கிலாந்து மண்ணில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதே வெற்றிக்கான முதல் படியாகும். அதிலும் குறிப்பாக 4ஆவது பவுலராக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இருந்தால் எதிரணியை தெறிக்க விட்டு வெற்றிக்கு போராடலாம். அப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் 4ஆவது பவுலராக வேறு வழியின்றி ஷார்துல் தாக்கூரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
அவர் தகுதியான வீரர் என்றாலும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்குவார் என்பது கவலையளிக்கக்கூடிய அம்சமாகும். அப்படிப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் விளையாடினால் இந்தியாவின் துருப்புச் சீட்டாக செயல்பட்டு கோப்பையை வெல்ல உதவுவார் என்று முன்னாள் ஜாம்பவான் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் நடக்காத ஒன்றை சுட்டிக்காட்டி பேட்டி கொடுத்திருந்தார். ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் நீண்ட கால தேடலான தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என இந்திய ரசிகர்கள் மகிழும் அளவுக்கு அசத்தினார்.
குறிப்பாக இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 2018 சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரால் சாதிக்க முடியாது என்று சொன்ன ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் விமர்சனத்தை பொய்யாக்கினார். இருப்பினும் 2018 ஆசிய கோப்பையில் சந்தித்த காயத்தால் 2019 உலகக்கோப்பைக்கு பின் சுமாராக செயல்பட்டு கழற்றி விடப்பட்ட அவர் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.