
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி 3 - 0 என வைட் வாஷ் ஆனது. இதனையடுத்து வெற்றி பெற வேண்டிய போட்டிகளை கூட நழுவவிட்டுவிட்டார் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கே.எல்.ராகுல் மீது எழுந்தது.
ரோஹித் சர்மா இல்லாததால் இந்திய அணியை வழிநடத்திய கே.எல்.ராகுல் ஃபீல்ட் செட்டிங்களில் பின் தங்கி இருப்பதாகவும், முக்கிய விக்கெட்களை கைப்பற்ற தெரியாததால் மிடில் ஆர்டரில் ரன்களை வாரி வழங்கியதாக கூறப்பட்டது. 3ஆவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி கேப்டன்சியில் உதவியதால் சற்று வெற்றி வாய்ப்பு கூடியிருந்தது.
இதனையடுத்து முன்னாள் வீரர்கள் பலரும் கே.எல்.ராகுலின் கேப்டன்சியை விளாசினர். குறிப்பாக சுனில் கவாஸ்கர், ராகுலுக்கு என்ன அனுபவம் உள்ளது என தெரியவில்லை. அவரின் கேப்டன்சியில் பஞ்சாப் அணி எதுவுமே செய்ததில்லை. எதிரணி பார்ட்னர்ஷிப் அமைக்கும் போதெல்லாம், கே.எல்.ராகுல் என்ன செய்வது என்று புரியாமல் திணறுகிறார். அடுத்த தொடர்களில் இருந்து இந்திய அணியின் விதி மாறுமா என்று பார்க்கலாம் என விரக்தியுடன் கூறியிருந்தார்.