சிஎஸ்கே அணி தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது - மொயீன் அலி!
சிஎஸ்கே என் மீது நம்பிக்கை வைத்து மூன்றாவது வீரராக என்னை களம் இறக்கி ஊக்கமளித்தார்கள். இதில் உள்ள பெரிய ஆச்சரியமே என்னை மீண்டும் தக்க வைத்து வாய்ப்பு கொடுத்தார்கள் என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக மோயின் அலி கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டிக்கு முன்னதாக பேசிய ஷார்ஜா வாரியரஸ் அணியின் கேப்டன் மொயீன் அலி, “யுஏஇல் நடைபெறும் ஐ எல் டி20 தொடர் பெரிய தொடராக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள வீரர்கள் இது போன்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய நாட்டு அணியும் பலமாக உருவாக்க வேண்டும். இதற்கு இது போன்ற லீக் தொடர்கள் பெரிய பாசிட்டிவாக அமையும் என நான் நம்புகிறேன்.
Trending
ஆனால் ஒரே நேரத்தில் மூன்று தொடர்கள் நடைபெறுவது தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் பல திறமையான வீரர்கள் வெவ்வேறு தொடர்களில் விளையாடுகிறார்கள். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் தங்கள் நாடுகளில் வழங்கப்படும் சம்பளத்தை விட இந்த லீக் தொடர்களில் அதிக ஊதியம் கிடைத்தால் நிச்சயமாக பிரச்சனைகள் ஏற்படும். குறைந்த கிரிக்கெட் விளையாடி அதிக சம்பளம் கிடைக்கும் என்றால் நிச்சயமாக லீக் தொடரை தான் அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள்.
தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதை விட இது போன்ற தொடரில் விளையாடி 38 வயது வரை ஓய்வு பெறாமல் இருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நான் ஓய்வு பெற்று விட்டேன். என்னுடைய குறிக்கோள் தற்போது இங்கிலாந்து அணிக்காக மீண்டும் ஒரு நாள் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும். சி எஸ் கே அணி தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது பேட்டிங் வரிசையில் ஏழாவது இடம் தான் எனக்கு கிடைக்கும் .
ஆனால் சிஎஸ்கே என் மீது நம்பிக்கை வைத்து மூன்றாவது வீரராக என்னை களம் இறக்கி ஊக்கமளித்தார்கள். இதில் உள்ள பெரிய ஆச்சரியமே என்னை மீண்டும் தக்க வைத்து வாய்ப்பு கொடுத்தார்கள். சிஎஸ்கே வில் வீரர்களுக்கு கிடைக்கும் ஆதரவு வேறு எந்த அணியிலும் கிடைக்காது. சிஎஸ்கே தான் இருப்பதிலேயே சிறந்த அணி. தோனியிடம் நான் கேப்டன் பதவி குறித்து நிறைய முறை பேசி இருக்கிறேன். அவரிடம் நிறைய கேள்வி கேட்டு இருக்கிறேன். ஒரு கேப்டனாகவும் பேட்டிங் யுக்தி குறித்தும் தோனியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
வரும் ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் சிஎஸ்கே ஒரு குடும்பமாக எனக்கு இருக்கும். வரும் சீசனை நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கள் அணிக்கு இந்த மினி ஏலம் சிறப்பாகவே அமைந்தது. பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களுடன் விளையாடுவதை நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். அதைவிட சேப்பாக்கம் ரசிகர்கள் முன் கிரிக்கெட் விளையாடுவது தான் எனக்கு மகிழ்ச்சியை தரும். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் போன்ற தொடர் பெரிய தாக்கத்தை கொடுத்திருக்கிறது.
அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் ஏற்பட்டிருக்கிறது. இந்திய வீரர்களின் பலம் பலவீனம் என்ன என்பது குறித்தும், பெரிய ரசிகர்கள் பட்டாளத்துக்கு முன் விளையாடும் அனுபவம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு வீரர் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களம் இறங்கினாலும் விளையாட வேண்டிய தகுதியை பெற்று இருந்தால் அது அணிக்கு மிகவும் நல்லது. சிஎஸ்கே இம்முறை எனக்கு மீண்டும் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய சொன்னால் நான் மகிழ்ச்சியுடன் ஏற்பேன்” என்று மோயின் அலி கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now