
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றவாது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் ரோனி தலுக்தர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் தமிம் இக்பால் - நஜ்முல் ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 35 ரன்களில் நஹ்முல் ஹொசைன் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த தமிம் இக்பாலும் 69 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் முஷ்பிக்கூர் ரஹிம் - மெஹிதி ஹசன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முஷ்பிக்கூர் 45 ரன்களிலும், மெஹித் ஹசன் 37 ரன்களிலும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அயர்லாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மார்க் அதிர் 4 விக்கெட்டுகளையும், ஆண்டி மெக்பிரைன், ஜார்ஜ் டக்ரெல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.