
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் ஹாம்ஷைர் - லீசெஸ்டர்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லெய்செஸ்டர் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லீசெஸ்டர்ஷைர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஹாம்ஷைர் அணியில் தொடக்க வீரர் ஃப்ளெட்சா மிடில்டன் 16 ரன்களிலும், டாம் பிரஸ்ட் 10 ரன்களிலும், பென் பிரௌன் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் நிக் கிப்பின்ஸ் - லியாம் டௌசன் இணை அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் நிக் கிப்பின்ஸ் சதமடித்து அசத்தியதோடு 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 136 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவருக்கு துணையாக விளையாடி வந்த லியாம் டௌசனும் அரைசதம் கடந்த கையோடு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 50 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களீல் டோமினிக் கெல்லி 39 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் ஹாம்ஷைர் அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களைக் குவித்தது. லீசெஸ்டர்ஷைர் அணி தரப்பில் டாம் ஸ்கிரீவன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய லீசெஸ்டர்ஷைர் அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரோமன் வால்கர், கேப்டன் லூயிஸ் ஹில், சாலமன் புடிங்கர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.