
இலங்கை மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி நடந்து முடிந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியும், இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் பெல்ஃபெஸ்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அயர்லாந்து அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது காயமடைந்த அயர்லாந்து மகளிர் அணி கேப்டன் லாரா டெலானி ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அயர்லாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து அயர்லாந்து மகளிர் அணியின் புதிய கேப்டனாக கேபி லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் கேபி லூயிஸிற்கு இந்த பொறுப்பானது வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அணியின் தற்காலிக துணைக்கேப்டனாக ஓர்லா பிரெண்டர்காஸ்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.