
நடப்பு ஐபிஎல் 16ஆவது சீசனில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கணிக்கப்பட்ட அணி பஞ்சாப் கிங்ஸ். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் வலுவான ராஜஸ்தான் என இரண்டு அணிகளை வென்று அசத்தியது. அதே சமயத்தில் ஹைதராபாத் அணி உடனான மூன்றாவது போட்டியில் கணிப்புகளுக்கு ஏற்றார் போல் சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்தது.
அணியின் கேப்டன் ஷிகர் தவான் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் ஒன்றை விளையாடிய ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் எடுக்க ஓரளவுக்குத் தப்பித்து நாகரிகமான தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் அணிக்கு வெளிநாட்டு வீரர்களில் முக்கியமாகப் பார்க்கப்பட்டவர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ். ஆனால் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க - இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கோல்ப் விளையாடி காயமடைந்து, அந்தக் காயம் குணமடையாத காரணத்தினால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் முழுவதுமாக விளையாடவில்லை. இது பஞ்சாப் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது.
மேலும் இரண்டு பின்னடைவுகளாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதல் இரண்டு ஆட்டங்களுக்கு கிடைக்கவில்லை. இதைவிட முக்கியமாக இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் லியாம் லிவிங்ஸ்டோன் காயத்தின் காரணமாக அணியுடன் வந்து இணையாமலே இருந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டு மீண்டும் அடுத்த வருடம் வெளியே விட்டு 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதற்குப் பின்பு சர்வதேச கிரிக்கெட்டில் இவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, இவரது ஐபிஎல் சந்தை மதிப்பு அதிகரித்தது.