
BAN vs HKG: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
ஆசிய கோப்பை தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் குரூப் பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, களமிறங்கிய ஹாங்காங் அணிக்கு ஜீஷான் அலி மற்றும் அன்ஷுமன் ரத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அன்ஷுமன் 4 ரன்னிலும், அடுத்து வந்த பாபர் ஹயாத் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
மேற்கொண்டு இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜீஷன் அலி 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த நிக்சாத் கான் - கேப்டன் யசிம் முர்தசா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் முர்தசா 28 ரன்னிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிசகத் கான் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இன்னிங்ஸ் முடிவில் ஹாங்காங் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத், தன்ஸிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.