
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மணிப்பால் அணிக்கு ராபின் உத்தப்பா - வால்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வால்டன் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹாமில்டன் மஸகட்ஸா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 2 சிக்சர்கலுடன் 23 ரன்களிலும் என ராஜத் பாட்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய காலின் டி கிராண்ட்ஹோம், கோட்ஸர், அமிதோஸ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 1 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 32 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மணிப்பால் டைகர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் ராஜத் பாட்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.