
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடப்பு சீசன் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற 4அவது லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் - குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் பார்த்தீவ் படேல் 4 ரன்களிலும், மார்ட்டின் கப்தில் 22 ரன்களையும், ஹாமில்டன் மஸகட்ஸா 20 ரன்களுடனும், கேதர் ஜாதவ், பவேன் நெஹி ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 18 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய சதுரங்கா டி சில்வா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டி சில்வா 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை சேர்த்தது. குஜராத் கிரேட்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மனன் சர்மா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.