
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வீரர்களை கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் மணிப்பால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் மற்றும் துருவ் ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். இவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 36 ரன்களைச் சேர்த்த நிலையில் துருவ் ராவெல் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 29 ரன்களை எடுத்த நிலையில் டுவைன் ஸ்மித்தும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இக்பால் அப்துல்லா 8 ரன்களுக்கும், காலின் டி கிரான்ட்ஹோம் 9 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய சிப்லி 2 ரன்களிலும், ஆஷ்லே நர்ஸ் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட பென் டங்க் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 97 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்த்தது.