
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தபட்டு வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் கோனார்க் சூர்யாஸ் ஓடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கோனார்க் சூர்யாஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் முனவீரா ரன்கள் ஏதுமின்றியும், கெவின் ஓ பிரையன் 2 ரன்களிலும், ஜெஸ்ஸி ரைடர் மற்றும் நட்ராஜ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, தொடக்க வீரராக களமிறங்கிய ரிச்சர்ட் லீவியும் 22 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் அந்த அணி 53 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த கேப்டன் இர்ஃபான் பதான் - யூசுஃப் பதான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இர்ஃபான் பதான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யூசுஃப் பதான் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அணியை கரைசேர்த்த கேப்டன் இர்ஃபான் பதானும் 63 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.