
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் 1992 போல கோப்பையை வென்று தங்களை புறக்கணித்து வரும் இந்தியர்களுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கியது. இதில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து நல்ல தொடக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவிடம் 8ஆவது முறையாக தோற்று ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்தது.
அதை தொடர்ந்து கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் சென்னையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இருப்பினும் அதன் பின் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற அந்த அணி அரையிறுதி வாய்ப்புக்காக காத்திருந்த அதிர்ஷ்டம் நேற்றுடன் முடிந்து போனது என்றே சொல்லலாம்.
அதாவது பெங்களூருவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கையை தோற்கடித்த நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தங்களுடைய கடைசி போட்டியில் 287 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற அசாத்தியமற்ற சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.