1-mdl.jpg)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் தற்போது நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கும் சென்றுள்ளது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பாக முஷ்பிக்கூர் ரஹீம் 66 ரன்களையும், ஷாகிப் அல் ஹசன் 40 ரன்களையும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் 10 ஓவர்கள் வீசி 49 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.