
அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் ஜேசன் ராய் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய உன்முக்த் சந்த் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கி ஷாகிப் அல் ஹசன் 18 ரன்களுக்கும், நிதீஷ் குமார் 26 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 4 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸல் 10 ரன்களுக்கும், என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உன்முக்த் சந்த் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 68 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஸியா உல் ஹக், முகமது மொஹ்சின், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.