
இலங்கை நாட்டில் தற்போது லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இது நம் நாட்டில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட்டை போன்றது. நடப்பு சீசனின் ஒரு போட்டியில் இலங்கை வீரர் ஷமிகா கருணரத்னே, பந்தை கேட்ச் பிடிக்கும்போது பற்களை எதிர்பாராத விதமாக பறி கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் களத்தில் மிகவும் அரிதாகவே இது மாதிரியான விபத்துகள் நடக்கும். இதில் கருணரத்னே தனது நான்கு பற்களை இழந்துள்ளதாக தெரிகிறது. இதனை இந்த லீக் தொடரில் அவர் விளையாடி வரும் கண்டி ஃபால்கான்ஸ் அணி உறுதி செய்துள்ளது.
கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற போட்டியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கல்லே கிளாடியேட்டர்ஸ் அணி வீரர் பெர்னாண்டோ கொடுத்த கேட்ச் வாய்ப்பை பிடிக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கேட்ச் மிகவும் உயரத்தில் இருந்து வந்துள்ளது. அதை பிடிக்கும் போதுதான் பந்து அவரது வாய் பகுதியில் பட்டுள்ளது. இருந்த போதும் வலியை பொறுத்துக் கொண்டு அந்த கேட்ச்சை அவர் பிடித்துள்ளார்.