
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹென்றிக்ஸ் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களில் குசால் பெரேராவும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய லஹிரு உதாரா 26 ரன்களிலும், நுவநிந்து ஃபெர்னாண்டோ 12 ரன்களிலும், மார்க் சாப்மேன் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய சமிந்து விக்ரமசிங்கே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வர, மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும், துஷன் ஹெமந்தா 15 ரன்களுக்கும், தில்ஷன் மதுஷங்கா 2 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த விக்ரமசிங்கே அரைசதம் கடந்ததுடன் 56 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தம்புளா சிக்ஸர்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. கலே மார்வெல்ஸ் அணி தரப்பில் கவிந்து நதீஷன் 3 விக்கெட்டுகளையும், இசுரு உதானா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கலே மார்வெல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 7 ரன்களிலும், டிம் செய்ஃபெர்ட் ரன்கள் ஏதுமின்றியும், பனுகா ராஜபக்ஷா, ஜனித் லியானகே ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸும் 17 ரன்களில் நடையைக் கட்டினார்.