
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கலே மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸுடன் இணைந்த டிம் செய்ஃபெர்ட்டும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பனுகா ராஜபக்ஷா ஒரு ரன்னிலும், டிம் செய்ஃபெர்ட் 28 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜனித் லியானகே - ஷஹான் ஆரச்சிகே இருவரும் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இதில் லியானகே 13 ரன்களுக்கும், ஷஹான் 15 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் டுவைன் பிரிட்டோரியஸ் 16 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கலே மார்வெல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. தம்புளா சிக்ஸர்ஸ் அணி தரப்பில் நுவான் பிரதீப், துஷான் ஹெமந்தா, கேப்டன் முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தம்புளா சிக்ஸர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் குசால் பெரேரா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.